கர்நாடக மாநிலத்தில் போதை பொருள் விநியோகம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல கன்னட பிரபலங்கள் போதை வழக்கில் சிக்கியுள்ளன. கலால் துறை அலுவலர்களும் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்நிலையில், பெங்களூரில் கஞ்சா சாக்லேட் விநியோகம் சர்வ சாதாரணமாக நடைபெற்றுவருவதாக கலால் துறை அலுவலர்களுக்கு தெரியவந்துள்ளது.
கிடைத்த தகவலின்படி, உத்தரப் பிரதேசத்தில் இருந்து பெங்களூருக்கு வரும் கஞ்சா சாக்லேட்கள் சாலையோரம் உள்ள பீடா கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளன. வெறும் 50 ரூபாய்க்கு விற்பனையாகும் இந்தச் சாக்லேட்களை கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் வாங்கிச் செல்வதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வடக்கு பிரிவு இணை ஆணையர் நாகராஜப்பா தலைமையிலான குழுவினர் பீடா கடையில் அதிரடி சோதனை நடத்தினர். அதில், 2 கிலோ 200 கிராம் கஞ்சா சாக்லேட்கள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தப்பியோடிய கடை உரிமையாளர் குலப் யாதவை தீவிரமாக தேடிவருகின்றனர். பெங்களூரில் கஞ்சா சாக்லேட் சிக்குவது இதுவே முதல் முறையாகும்.