"எதிரிக்கு எதிரி நண்பன்", இந்த வரிகளின் அடிப்படையில்தான் பாகிஸ்தான் - சீனா கூட்டணியாக இணைந்து இந்தியாவுக்கு எதிர்தரப்பில் நிற்கின்றன. இரு நாடுகளுடன் எல்லைச் பிரச்னை வைத்துள்ள இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கும்விதமாக சீனாவின் விண்வெளித் தொழில்நுட்பம் பாகிஸ்தானுக்கு உதவுகிறது.
பாகிஸ்தான் ராணுவத்திற்கு உயர்தர தொழில்நுட்ப வசதிகளை வழங்குவதன் மூலம் சீனா - பாகிஸ்தான் விண்வெளி கூட்டணி உருவாகியுள்ளது. இது குறித்து பாதுகாப்புத் துறையின் நிபுணர் அஜய் லிலே, பாகிஸ்தான் இதுவரை விண்வெளித் துறையில் பெற்ற அனைத்து முன்னேற்றமும் சீனாவின் உதவியுடன் பெற்றதாகும். பொது வேளைகளுக்காக தொழில்நுட்ப பகிர்வு இருந்துவந்த நிலையில், ராணுவ திட்டங்களுக்கு இரு நாடுகளும் ஒன்றிணைந்துள்ளன.
சீனா பெல்ட் ரோட் முன்னெடுப்பு திட்டத்தை தீவிரமாக மேற்கொண்டுவரும் நிலையில், அந்நாட்டிற்கு 'பெய்து'(Beidou) திட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக் கருதப்படுகிறது. அதேவேளை இந்தாவின் பங்கிற்கு NAVIC என்ற தொழில்நுட்பம் இருப்பது பலமாகக் கருதப்படுகிறது.
சீன ராணுவத்தால் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பெய்து என்ற திட்டம் இன்னும் சில நாட்களில் முழுமைப்பெற்றுவிடும். செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் முக்கிய நகர்வாக கருதப்படும் இந்த திட்டம் சீனாவின் பெரும் பாய்ச்சலாகக் கருதப்படுகிறது. அமெரிக்காவின் ஜி.பி.எஸ், ரஷ்யாவின் க்ளோனாஸ், ஐரோப்பிய ஒன்றியத்தின் கலிலிலயோ ஆகிய திட்டங்களுக்கு அடுத்தப்படியாக செயற்கைக்கோள் தொழில்நுட்பத் திட்டத்தில் நான்காவது நாடாக சீனா உருவெடுத்துள்ளது.
பாகிஸ்தானுக்கு இந்த பெய்து தொழில்நுட்பம் அளிக்கப்படும் பட்சத்தில், சக்திவாய்ந்த பாதுகாப்புத்துறை சார்ந்த ஆயுதங்களை நேர்த்தியாக இயக்குவதற்கான பலத்தை பெற்றுவிடும்.
சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்குப்பின் சமீப காலமாக இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் மோதல்போக்கு அதிகரித்துவரும் நிலையில், சிக்கிம் எல்லைப் பகுதியில் சீன ராணுவமும் தொல்லைக் கொடுத்துவருகிறது. இதன் பின்னணியில்தான் சீனா - பாகிஸ்தான் செயற்கைக்கோள் தொழில்நுட்பக் கூட்டணி அமைந்துள்ளது.
விண்வெளித்துறையில் வேகமான முன்னேற்றத்தைச் சந்தித்துவரும் சீனா, கடந்தாண்டில் மட்டும் 38 விண்கலன்களையும், 100க்கும் மேற்பட்ட செயற்கைக்கோளையும் அனுப்பியுள்ளது. 2020ஆம் ஆண்டில் மேலும் 40 திட்டங்களை செயல்படுத்தவும் சீனா தயாராகிவருகிறது.
இதையும் படிங்க: மருத்துவத் துறையில் முக்கிய தேவைகளில் ஒன்று 'செயற்கை நுண்ணறிவு'...!