உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களுள் ஒன்றான ஹார்வர்ட் பல்கலைக்கழகம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், காற்று மாசுக்கும் கோவிட்-19 உயிரிழப்புகளுக்கும் தொடர்பு உள்ளதாக்கத் தெரியவந்துள்ளது. குறிப்பாக, காற்று மாசுபாட்டால் மிகவும் பாதிக்கப்பட்ட உலகின் 30 நகரங்களில் 21 நகரங்களை தன்னகத்தே கொண்டுள்ள இந்தியாவில் எம்மாதிரியான விளைவுகள் இது ஏற்படுத்தலாம் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
அதிகம் காற்று மாசுபாடு கொண்ட நகரங்களில் வாழும் மக்கள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்படுவதற்கு அதிகம் வாய்ப்புள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது. நச்சுக்காற்றைத் தினந்தோறும் சுவாசிப்பதன் விளைவாக நகரவாசிகளின் நுரையீரல், இதயத்தில் உள்ள குறைபாடுகளே இதற்குக் காரணம் என அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
ஆனால், கரோனா பெருந்தொற்று நம் அனைவரின் வாழ்வையும் கபளீகரம் செய்துவரும் அதே வேளையில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், பாழாகிப்போன இயற்கையைச் சீர்செய்யவும் உதவியிருப்பதாகக் கூறுகிறார் எரிக் சோல்ஹீம். முன்னாள் ஐநா சுற்றுச்சூழல் திட்ட செயல் தலைவரும், முன்னாள் ஐநா துணை செயலருமான இவர், நம் ஈடிவி பாரத் மூத்த செய்தியாளர் ஸ்மிதா ஷர்மாவிடம் பேசுகையில், கோவிட்-19 பெருந்தொற்று வருவதற்கு முன்பிருந்ததை விட உலகம் தற்போது பசுமையாக இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.
சூரிய ஒளி, காற்றைக் கொண்டு உருவாக்கப்படும் மின்சாரம் மலிவாகி வரும் வேளையில், மின்சார உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் பாரம்பரிய நிலக்கரியிலிருந்து அதற்கு மாறி வருதாகவும், இந்தப் போக்கில் இந்தியாவின் வேகம் பாராட்டுக்குரியது என்றும் எரிக் கூறினார்.
நார்வே தலைநகர் ஆஸ்லோவிலிருந்து காணொலி மூலம் ஸ்மிதார ஷ்ரமாவிடம் பேசிய எரிக், "நமக்கு அற்புதமான எதிர்காலம் உண்டு. புலி உள்ளிட்ட வனவிலங்குகளைக் காப்பதில் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
இந்தியா தான் உலகின் மிகவும் மலிவான சூரிய ஆற்றலில் உண்டாகும் மின்சாரம் கிடைக்கிறது. அஸ்ஸாமில் சூரிய ஒளியால் இயங்கும் ரயில் நிலையம் உள்ளது, கேரளாவில் ஒரு விமான நிலையமே சூரிய சக்தியில் இயங்குகிறது. மத்தியப்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் விரைவில் டெல்லியில் உள்ள மெட்ரோ ரயில்கள் சூரிய சக்தியில் இயங்க உள்ளன.
இந்தியாவில் இத்தனை நல்ல காரியங்கள் செயல்பாட்டில் உள்ளன. எல்லாப் பிரச்னைகளையும் ஒன்றுசேர்த்து தீர்க வேண்டும் என்பதிலேயே நாம் கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.
சீனாவின் இறைச்சி சந்தைக்கும் கோவிட்-19 பரவலுக்கும் தொடர்புள்ளதாக எழுந்துள்ள விவாதம் குறித்து கேள்விக்குப் பதிலளித்த அவர், "சீனாவில் உள்ள இறைச்சி சந்தைகளை (Wet Market) அந்நாட்டு அரசு ஒழுங்குமுறைக்குக் கொண்டுவர வர வேண்டும். வனவிலங்குகளை வேட்டையாடி விற்கப்படுவதை அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். இதுகுறித்து உயர்மட்ட தலைமை முடிவெடுக்க அதனைச் செயல்படுத்த வேண்டும்.
இதுபோன்ற சந்தைகள் சீனாவில் மட்டுமல்ல உலகின் மற்ற பகுதிகளிலும் காணப்படுகிறது. ஆனால், சீனாவின் உள்ள இறைச்சி சந்தைகளே நோய்ப் பிறப்பின் கூடாரமாகி வருகிறது.
இந்த கோவிட்-19 பேரிடருக்கு முன்பு சீனா இரண்டு முக்கிய முடிவுகளை எடுத்தது. ஒன்று யானை தந்தங்களை இறக்குமதிக்குச் செய்ய தடைவிதித்தது.
இன்னொன்று, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலிருந்து குப்பைகளை இறக்குமதி செய்யப்படுவதற்குத் தடை விதித்தது.
தந்தங்களின் தேவை குறைந்ததால், ஆப்ரிக்காவில் உள்ள யானைகளின் பாதுகாப்பு உறுதியானது.
மேலும், குப்பைகளை இறக்குமதி செய்யச் சீனா தடை விதித்த பின்னர், இந்தியா, வியட்நாம் போன்ற மற்ற ஆசிய நாடுகளும் அதனைப் பின்பற்றத் தொடங்கின. உலகின் குப்பைத் தொட்டியாக விளங்க விரும்பவில்லை என்பதே சீனாவின் எண்ணமாக இருந்தது. இதன் காரணமாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள் தங்களது குப்பைகளை தாங்களே பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதை இது உறுதிசெய்தது" என்றார்.
ஆனால், கோவிட்-19 விவகாரம் குறித்து அமெரிக்காவும், சீனாவும் ஒருவர் மீது ஒருவர் பழிசுமத்தும் வார்த்தைப் போரில் ஈடுபடுவது நோயை விரட்டியடிக்கும் முயற்சிக்குத் தடையாகிவிடும் என எரிக் அச்சம் தெரிவிக்கிறார்.
இதுகுறித்து பேசிய அவர், "சீனாவும், அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகள், இந்தியாவுடன் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டும். அந்த விஷயத்தில் (மைக்ரோசாப்ட் நிறுவனர்) பில்கேட்ஸ் சொல்வதை நான் ஏற்றுக்கொள்ளுகிறேன். அதிலிருந்து நாம் வெளியில் வரவேண்டும். உலகின் மிக மோசமான பெருந்தொற்றான (1918ஆம் ஆண்டு) ஸ்பானிஷ் காய்ச்சல் அமெரிக்காவின் கான்சஸ் நகரில் தோன்றியது. அப்போது அந்தக் காய்ச்சலுக்கு அமெரிக்காதான் காரணம் என யாரும் பழிசுமத்தவில்லை. ஆகையால், பழிசுமத்துவதை விட்டுவிட்டு பிரச்னையைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவோம்" என்றார்.
கோவிட்-19 காலத்தில் பொருளாதாரத்தையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க இந்தியா என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "தென் கொரிய வழியில் இந்தியா அதன் பொருளாதாரத்தை மீட்க வேண்டும். 2008 பொருளாதார வீழ்ச்சியைத் தொடர்ந்து தென் கொரியா மற்ற நாடுகளை விட மிக விரைவாகவும், வெற்றிகரமாகவும் மீண்டெழுந்தது. 80 சதவீத பொருளாதாரம் மீண்டது, இதனால் அங்குப் பல வேலைவாய்ப்புகள் உருவாயின" என்றார்.
நார்வே நாட்டின் முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சராக பணிபுரிந்துள்ள எரிக் உலக பசுமைக்கு மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்துவதே மிகவும் முக்கியம் எனவும் கூறினார்.
இதையும் படிங்க : சீனாவைக் கட்டம் கட்டும் அமெரிக்கா - 18 புள்ளி செயல்திட்டம் ரெடி!