கிழக்கு லடாக்கிலுள்ள கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 வீரர்கள் சீன ராணுத்தினரால் கொல்லப்பட்டனர். இதனால் எல்லையில் பதற்றம் நிலவிவருகிறது. இந்நிலையில், மே மாதத்திலிருந்தே சீனா விதிகளை மீறி எல்லைப் பகுதிகளில் ராணுவத்தைக் குவித்துவந்ததாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், "மே மாதத்திலிருந்தே உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் சீனா, தனது ராணுவத்தையும் ஆயுதங்களையும் குவித்துவந்தது. இது அனைத்து விதமான போர் ஒப்பந்தங்களுக்கு எதிராக உள்ளது.
பல காலமாகவே கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவம் ரோந்து பணியில் ஈடுபட்டுவருகிறது. இதனை மாற்ற முயற்சித்தது இல்லை. ஆனால், சீனா அதனை மாற்ற முயற்சிக்கிறது. முதல்முறையாக உயிரிழப்பு நிகழ்ந்ததாக சீனா நேற்றுதான் ஒப்புக் கொண்டது. ஆனால், எண்ணிக்கை மிகக் குறைவு எனத் தெரிவித்திருந்தது" என்றார்.
முன்னதாக, கல்வான் மோதலில் இந்திய ராணுவத்தை விட இரண்டு மடங்கு அதிகமான உயிரிழப்பை சீனா சந்தித்திருக்கும் என முன்னாள் ராணுவத் தளபதி வி.கே. சிங் தெரிவித்தார். இதனை சீன வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் சாவு லிஜியான் முற்றிலுமாக மறுத்தார்.
மேலும், வெளியுறவுத் துறையும் இந்திய ஊடகங்களும் பொய்யான தகவல்களைப் பரப்பிவருவதாக சீனா குற்றஞ்சாட்டியது. இந்திய எல்லைப் பகுதியில் கட்டமைப்புகளை உருவாக்க சீன முயற்சித்ததே கல்வான் மோதலுக்குக் காரணம் என இந்தியா தெரிவித்தது.
இதையும் படிங்க: சீன எல்லையில் தயாராகும் சாலைகள்: அதிரடி காட்டும் இந்தியா