உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் 2018ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி பொறுப்பேற்றார். நவம்பர் 17ஆம் தேதி இவர் ஓய்வுபெறவுள்ளார். இதனைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தபடியாக உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக இருக்கும் எஸ்.ஏ. பாப்டேவை அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கலாம் என சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு ரஞ்சன் கோகாய் கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் பரிந்துரை ஏற்கப்பட்டால் நவம்பர் 3ஆம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பாப்டே பொறுப்பேற்பார். இவரின் பதவிக்காலம் 18 மாதங்களாக இருக்கும். ரஞ்சன் கோகாயின் பரிந்துரையை சட்டத் துறை அமைச்சர் பிரதமரிடம் தெரிவிப்பார். இறுதியில் குடியரசுத் தலைவரிடம் தெரிவிக்கப்படும்.
பாப்டே கடந்துவந்த சட்டப்பாதை
மகாராஷ்டிரா மாநிலத்தில் 1956ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி பிறந்த பாப்டே, நாக்பூர் பல்கலைகழகத்தில் தன் படிப்பை முடித்தார். பின்னர், 2000ஆம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பொறுப்பேற்று மத்தியப் பிரேதச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2012ஆம் பதவி ஏற்றார்.
அயோத்தியா, பிசிசிஐ, பட்டாசுகளை தடைசெய்வது உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளை உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருக்கும்போது இவர் விசாரித்துள்ளார்.
அதிகாரத்தை நிலைநாட்டுவாரா பாப்டே?
தன்னாட்சி நிறுவனத்தின் அதிகாரம் பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துவரும் நிலையில், எஸ்.ஏ. பாப்டே தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றால் அதன் அதிகாரத்தை நிலைநாட்டுவாரா எனக் கேள்வி எழுந்துள்ளது.