புதிதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், டெல்லியின் எல்லைப் பகுதிகளில் போராட்டம் நடத்திவருகின்றனர். போராட்டம் நடத்தும் விவசாயிகளை காலிஸ்தானிகள் என மத்திய அமைச்சர் விமர்சித்துள்ள நிலையில், பிரிவினைவாதிகளாக இருந்தால் அவர்களிடம் ஏன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிவரும் விவசாயிகளை காலிஸ்தானிகள் என்றும் பாகிஸ்தான், மாவோ, சீனா ஆகியவற்றின் ஆதரவாளர்கள் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். நாட்டை பிளவுப்படுத்தும் கும்பல் என விமர்சிக்கப்படுகின்றனர்.
இப்படி நீங்கள் வகைப்படுத்தியுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கானோரில் யாரும் விவசாயிகள் இல்லை என கூறுகிறீர்களா? அப்படி இருக்கும்பட்சத்தில் அவர்களிடம் ஏன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.
மத்திய அரசு, விவசாய சங்க பிரதிநிதிகளுக்கிடையே பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இருப்பினும், அனைத்தும் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.