ராஜ கண்ணப்பன் வழக்கு: சிதம்பரத்திடம் கிடுக்கிப்பிடி விசாரணை - சிதம்பரத்திடம் கிடுக்குப்பிடி விசாரணை.
சிவகங்கை தொகுதியில் 2009ஆம் ஆண்டு போட்டியிட்டபோது, வாக்காளர்களுக்கு தான் பணம் கொடுத்தது தொடர்பான எந்த ஆதாரமும் இல்லை என்று ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
2009ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் அப்போதைய உள் துறை அமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான ப. சிதம்பரம் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
இந்த வெற்றியைப் பெறுவதற்காக வாக்காளர்களுக்கு ப. சிதம்பரமும் அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் பணம் கொடுத்ததாக அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்டு மூன்றாயிரத்து 354 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த ராஜ கண்ணப்பன் வழக்குத் தொடர்ந்தார்.
அந்தத் தேர்தல் வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல்செய்ய நீதிபதி புஷ்பா சத்யநாராயணன் தலைமையில் குழு ஒன்றை அமைக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், அந்தக் குழுவினர் ப. சிதம்பரத்திடம் நேற்று கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இந்த விசாரணையின்போது, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாகத் தன் மீது தொடரப்பட்ட வழக்கு முழுக்க முழுக்க கட்டுக்கதை என்றும், அதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை எனவும் தன் மீதான குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இதையடுத்து ப. சிதம்பரத்தின் வாக்குமூலம் அனைத்தையும் பதிவு செய்துகொண்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை மார்ச் 30ஆம் தேதி ஒத்திவைத்தது.
மேலும், சிதம்பரம் வெற்றிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த ராஜ கண்ணப்பன் தற்போது அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இரண்டு பழனிசாமிகளும் தமிழ்நாட்டை குட்டிச்சுவராக்குகின்றனர் - அதிமுக முன்னாள் அமைச்சர்