இந்தியாவில் சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகளைக் கடந்து, பல்வேறு தொழில்நுட்ப வளர்ச்சியை எட்டியும், விண்வெளியில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியிருந்தாலும் இன்னும்கூட பல ஏழை எளிய, சிறுபான்மையின மக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாதப் பல பகுதிகள் இந்தியாவில் பல உண்டு.
அதற்கு எடுத்துக்காட்டாக விளங்குவது, சத்தீஸ்கர் மாநிலத்தில் ஜகதல்பூர் மாவட்டத்தில் உள்ள புஸ்பல் கிராமம் தான். சத்தீஸ்கரில் கிராம மக்கள் பலரும் மிகவும் மோசமான வாழ்க்கை தரத்தில்தான், இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
புஸ்பல் கிராம மக்களுக்கு குடிப்பதற்கு, குடிநீருக்கான நீர் நிலைகள் என எந்த மூலக்கூறுமின்றி மிகவும் தவித்து வருகின்றனர். மேலும் குழாய் தண்ணீர், மின்சாரம், கழிவறைகள் ஆகிய அடிப்படை வசதிகள், இங்குள்ள பெருவாரியான கிராமவாசிகளுக்குக் கேள்விகுறியாகவே இருந்து வருகிறது.
இதனால், அந்தக் கிராமத்தில் ஒரு பகுதியில் உள்ள பெரிய குழியில் தேங்கியுள்ள அசுத்தமான நீரை சமையலுக்கும் மற்ற நீர் தேவைகளுக்கும் பயன்படுத்தி வருவதாக அம்மக்கள் கூறுகின்றனர்.
ஒன்று இந்த நீரைப் பருகி, தங்கள் தாகத்தைப் போக்கிக்கொள்ள வேண்டும்; இல்லையேல், தாங்கள் தாகத்தில் வாடியே சாக வேண்டும் என்று குமுறும் புஸ்பல் கிராம மக்கள், இந்த அசுத்தமான நீரால் உடலில், அனைத்துப் பகுதிகளிலும் ஒவ்வாமை அதிகரித்து வருவதாக வேதனைத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அக்கிராமத்தில் உள்ள தொகுதியின் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் சந்தன் கஷ்யப் தெரிவித்ததாவது, "என்னுடைய ஒன்றரை ஆண்டு காலம் தேர்தல்களில் கழிந்தது. அதையடுத்து கடந்த மூன்று மாதங்கள் கரோனாவால் எவ்வித பணிகளையும் மேற்கொள்ள முடிவில்லை. ஆகையால், முடிந்தவரை விரைவில் அம்மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கச் செய்வேன்" என்றார்.
வெகு விரைவில் இந்நிலை மாற வேண்டும் என்பதே இந்த மக்களின் விருப்பமாக உள்ளது.
இதையும் படிங்க: ஆளுநர் கிரண்பேடியின் தாமதத்தால் அரசுக்கு பெரும் இழப்பு - முதலமைச்சர் நாராயணசாமி