சத்தீஸ்கர் மாநிலம் மகாசமுந்த் மாவட்டம் பண்டேலி பகுதியில் அமைந்துள்ள காவல் நிலையத்திற்கு சுமன் பட்டேல் தனது காதலன் மீது புகார் கொடுக்க வந்திருக்கிறார்.
சுமன் பட்டேல் (29), ராம் குமார் பட்டேல் (25) இருவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்துவந்தனர். சுமன் தன்னைவிட வயதில் பெரியவராக இருந்தது ராம் குமாருக்கு ஒரு பொருட்டாக இல்லை. இருவரும் ஒருவரையொருவர் மானசீகமாக நேசித்துவந்தனர்.
ராம் குமாரை அதிகமாக நேசித்த சுமன், ஒரு கட்டத்தில் தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு அவரிடம் கேட்டிருக்கிறார். பெற்றோரின் சம்மதத்தோடு திருமணம் செய்துகொள்ள விரும்பிய ராம்குமார், தனது பெற்றோரிடம் சுமனைக் குறித்து பேசியிருக்கிறார்.
சுமனின் வயது முதிர்வைக் காரணம் காட்டிய ராம் குமார் பெற்றோர், தொடர்ந்து திருமணத்தைத் தட்டிக் கழித்துவந்தனர். இதனால் இருவருக்கும் அவ்வப்போது சிறு சிறு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பெற்றோரின் முடிவால் ராம்குமார் தன்னை திருமணம் செய்ய மறுத்துவிடுவார் என்ற அச்சம் ஏற்படவே, சுமன் காவல் நிலையத்தின் உதவியை நாடியிருக்கிறார். தன்னை திருமணம் செய்வதாகக் கூறிவிட்டு ராம்குமார் காலம் தாழ்த்துவதாக அவர் மீது புகார் அளித்துள்ளார்.
சுமனின் தரப்பு நியாயத்தை விசாரித்த காவல் துறையினர் ராம்குமாரின் தரப்பையும் தெரிந்துகொள்ள முடிவுசெய்து அவரை வரவழைத்தனர். இந்தக் காதல் விவகாரம் குறித்து காவல் துறையினர் கேள்விக் கணைகளை வீச வீச மெல்ல ராம்குமார் தான் காதலித்ததையும், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததையும் ஒப்புக்கொண்டார்.
காதல் திருமணம் செய்யவுள்ள தங்கள் இருவருக்கும் பாதுகாப்பு அளிக்குமாறு காவல் துறையினருக்கு கடிதம் எழுதினர். இதை ஏற்றுக் கொண்ட காவல் துறையினர் அருகிலிருந்த சிவன் கோயிலில் இருவருக்கும் திருமண ஏற்பாட்டை செய்தனர்.
சுற்றி காவல் துறை அலுவலர்கள் புடைசூழ, சுமனின் சகோதரர் சாட்சியாக இத்திருமணம் எளிமையாக நடந்தது. திருமணத்திற்குப் பிறகு ராம்குமாரின் குடும்பமும் அவர்களை ஏற்றுக் கொண்டது.
சுமன் - ராம்குமார் இணையின் காதல் திருமணம் காதலுக்கு வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபணம் செய்துள்ளது. பெற்றோர் எதிர்ப்பால் தடைப்பட்ட இவர்களின் காதல் திருமணத்தை காவல் துறையினர் தலைமையேற்று நடத்திய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.