உத்தரப் பிரதேசம், ஹத்ராஸ் என்ற பகுதியில் இளம் பெண் ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
அப்பெண்ணின் உடலையும் பெற்றோர்களுக்கு அளிக்காமல் உத்தரப் பிரதேச காவல் துறையினர் நள்ளிரவில் எரித்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பி மோகன் மண்டவி, இது குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார்.
ஹத்ராஸ் சம்பவம் சித்தரிக்கப்பட்ட ஒன்று என்றும், இதை காங்கிரஸ்காரர்கள் வேண்டும் என்று பிரச்னையாக்குகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து அவர்கள் பேச மறுப்பது ஏன் என்றும் மோகன் மண்டவி கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக எம்பியின் இந்தக் கருத்துக்கு பல்வேறு காங்கிரஸ் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒரு சம்பவம் உண்மையானதா அல்லது போலியானதா என்பதைக் கூறும் உரிமையை மோகன் மண்டவிக்கு வழங்கியது யார் என்றும் அவர்கள் விமர்சித்துள்ளனர்.