சத்தீஸ்கரில் பால்ராம்பூர் மாவட்டத்தின் வனப்பகுதிகளில் யானைகள் அடுத்தடுத்து உயிரிழப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கு கடந்த மூன்று நாள்களில் கருவுற்ற யானை உட்பட மூன்று யானைகள் இறந்துள்ளன.
இதுகுறித்து, கூடுதல் வனத்துறை முதன்மை வனப்பாதுகாவலர் அருண்குமார் பாண்டே கூறுகையில், 'ராஜ்பூர் வனப்பகுதியில் இறந்த யானை மாதிரி உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, ராஜ்பூர் வனப்பகுதிக்கு அருகில் உள்ள பிரதாப்பூர் வனப்பகுதியில், உயிரிழந்த இரண்டு யானைகளுக்கு நடத்திய உடற்கூறாய்வில் நஞ்சினை உண்டு உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டது. முதற்கட்ட தகவல்களின்படி, இந்த யானைகள் சமீபத்தில் தான், ராஜ்பூரிலிருந்து பிரதாப்பூர் வனப்பகுதிக்கு நகர்ந்து வந்துள்ளன. அச்சமயத்தில் கிராமத்தில் உள்ள சில வீடுகள் வழியாக யானைகள் சுற்றித்திரிந்துள்ளன.
அப்போது, மஹுவா பூக்களை அதிகமாக யானைகள் சாப்பிட்டிருக்கலாம் அல்லது கிராமவாசிகள் வீடுகளில் வைத்திருந்த யூரியாவை (உரத்தை) உட்கொண்டிருக்கலாம். இது நச்சுத்தன்மை கொண்டது" என்றார்.
மேலும், வன ஊழியர்கள் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், அப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் விஷம் கலந்துள்ளதா என்பதையும் வனத்துறையினர் சோதனை செய்கின்றனர்.