ஐக்கிய அரபு அமீரகத்தின் ரெட் கிரசென்ட்டின் ஒத்துழைப்புடன் கேரளாவில் வீடில்லாத ஏழைகளுக்கு வீடு கட்டித்தரும் லைஃப் மிஷன் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த லைஃப் மிஷன் திட்டத்தின் கீழ் திரிசூர் வடக்கஞ்சேரியில் வீடு கட்டித்தரும் டெண்டரைப் பெற அதன் மேலாண்மை நிர்வாகியாக இருந்த ஸ்வப்னா சுரேஷ் யூனிடக் பில்டர்ஸ் தலைவர் சந்தோஷ் ஈப்பனிடம் கையூட்டுப் பெற்றதாக அறியமுடிகிறது.
திருவனந்தபுரம் விமான நிலைய தங்கக் கடத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷிடம் சிபிஐ.மேற்கொண்ட விசாரணையில் இந்த குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டது.
கேரள மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்களை நடத்தின.
இதன் விளைவாக லைஃப் மிஷன் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
இந்நிலையில், சிபிஐ பதிவுசெய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி கேரள அரசு உயர் நீதிமன்றத்தில் அண்மையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்துள்ளது.
இந்த மனுவுடன் யூனிடக் பில்டர்ஸ் தலைவர் சந்தோஷ் ஈப்பனும் தனியாக பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், "வீடு கட்டித்தரும் ஒப்பந்தப் பணியை பெறுவதற்கு பணம் கொடுக்கப்பட்டது உண்மைதான். 2019ஆம் ஆண்டு, டிசம்பர் 2ஆம் தேதி அமீரக தூதரகத்தில் நடைபெற்ற தேசிய தினம் கொண்டாட்டத்தில் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலாவுக்கு ஐ-போன் ஒன்றை வாங்கித் தரவேண்டுமென ஸ்வப்னா கேட்டார்.
அதற்காக நவம்பர் மாதம் 29ஆம் தேதி எர்ணாகுளத்திலுள்ள ஒரு மாலிலிருந்து ஐந்து ஐபோன்கள் வாங்கி ஸ்வப்னாவிடம் கொடுத்தேன். அதற்கான பில் ஆதாரம் என்னிடம் இருக்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த குறிப்பிட்ட தகவல் அம்மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுநாள்வரை முதலமைச்சர் பினராயி விஜயனின் அரசை கடுமையாக விமர்சித்துவந்த காங்கிரஸ் கட்சியினருக்கும் அந்த முறைகேட்டில் பங்கு உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதற்கு சென்னிதலா வெளியிட்டுள்ள அறிக்கையில், "லைஃப் மிஷன் முறைகேடு தொடர்பான பிரமாணப் பத்திரத்தில் என்னுடைய நற்பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தகவல் தெரிவித்துள்ள யூனிடாக் பில்டர்ஸ் தலைவர் சந்தோஷ் ஈப்பன் என்னிடம் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
அந்த தகவலைத் திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் மானநஷ்ட ஈடுகேட்டு வழக்கு தொடரப்படும். அவர் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.