சேலம் - சென்னை இடையேயான எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எட்டு வழிச்சாலை திட்ட இயக்குநர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நிலத்தை எடுத்துக் கொள்ளாமல் சுற்றுச்சூழல் அனுமதி பெறமுடியாது என்றும் திட்டத்திற்கான நிலத்தை கையகப்படுத்த அனுமதிக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் கோரிக்கை-வைக்கப்பட்டது.
இதையடுத்து, எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்க தற்போதைக்கு முடியாது என தெரிவித்த நீதிபதிகள், இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எத்தனை பேர் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார்கள்? என கேள்வியெழுப்பினர்.
மேலும், சேலம் - சென்னை இடையேயான எட்டு வழிச்சாலை விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை நாளை காலைக்குள் மத்திய நெடுஞ்சாலைத் துறை பதிலாக அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை வருகின்ற 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.