மக்களவைத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக பாஜக ஆட்சி அமைத்தது. இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட 58 அமைச்சர்கள் மே 30ஆம் தேதி பதவியேற்றனர். அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று பாதுகாப்பு, முதலீடு, பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அமைச்சர்கள் குழுவை பிரதமர் மோடி அமைத்தார்.
இந்நிலையில், பொருளாதாரம், பாதுகாப்பு, அரசியல் விவகாரங்கள், நாடாளுமன்ற விவகாரங்கள், முதலீடு - வளர்ச்சி, வேலைவாய்ப்பு - திறன் மேம்பாடு ஆகிய எட்டு அமைச்சரவைக் குழுக்களை மாற்றியமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதில் பாதுகாப்புக்கான கேபினெட் குழுவில் பிரதமர் நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் பிரதமர் மோடி ஆறு கேபினெட் குழுக்களில் இடம்பெற்றுள்ளார்.