இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது. முக்கியமாக, குறைந்த செலவில் விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் தொழில்நுட்பத்தில் பல செயற்கொள்களை அனுப்பி வருகிறது.
அந்த வகையில், நிலவின் தென்துருவ பகுதியை ஆராய சந்திரயான்-2 விண்கலத்தை ஏவ இஸ்ரோ திட்டமிட்டது. அதன்படி 978 கோடி செலவில் உருவாக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் மார்க்-3 ஏவுகணை மூலம் ஏவுவதற்கான கவுண்ட் டவுன் நேற்று காலை 6.51 மணிக்கு தொடங்கியது.
இந்நிலையில் இன்று அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவ இருந்த சந்திரயான்-2 விண்கலம், 56 நிமிடங்கள் 24 விநாடிகளில் நிறுத்தப்பட்டது. ஏவுகணையில் தொழில்நுட்ப கோளாறு கண்டுப்பிடிக்கப்பட்டதையடுத்து கவுண்ட் டவுன் நிறுத்தப்பட்டது என்றும், சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.