இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு சாதனைகளைப் படைத்துவருகிறது. முக்கியமாகக் குறைந்த செலவில் விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் தொழில்நுட்பத்தில் 'கில்லி'தான் நமது இஸ்ரோ. அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் கூட தங்கள் செயற்கைக்கோளை இந்தியா மூலமே அனுப்ப விரும்புகின்றன. அதற்குக் காரணம் செலவு குறைவு என்பது மட்டுமல்ல... சக்சஸ் ரேட் எனப்படும் வெற்றி விகிதம் அதிகம் என்பதும்தான். இஸ்ரோ அனுப்பிய பெரும்பாலான ராக்கெட்டுகள் வெற்றிகரமாக இருப்பதன் காரணமாகத்தான் ஆரம்ப காலங்களில் விண்வெளித் தொழில்நுட்பத்தை நம்மிடம் பகிரத் தயக்கம் காட்டிய அமெரிக்காவும் நமது சந்திரயான் 2இல் தங்களது செயற்கைக்கோளை அனுப்பக் கேட்டது.
இன்றிலிருந்து சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 2008ஆம் ஆண்டு நிலவை ஆய்வு செய்ய இஸ்ரோ சந்திரயான் என்கிற செயற்கைக்கோளை அனுப்பியது. வெறும் ரூ.386 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த விண்கலம், சுமார் 312 நாட்கள் வரை செயல்பாட்டிலிருந்தது. விண்வெளித் துறையைப் பொறுத்தவரை ரூ.386 கோடி என்பது நாம் கடையில் மிட்டாய் வாங்கும் செலவுக்குச் சமம். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயிரக்கணக்கான கோடிகள் செலவு செய்து அனுப்பிச் செய்ததை நாம் வெறும் ரூ.386 கோடியில் செய்து முடித்தோம். அதுமட்டுமின்றி விண்வெளியைப் பற்றி வெளியான ஹாலிவுட் திரைப்படமான 'கிராவிட்டி'யின் பட்ஜெட் ரூ.600 கோடிக்கு மேல் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திரயான்-1இன் வெற்றியைத் தொடர்ந்து சந்திரயான்-2க்கான திட்டமும் தீட்டப்பட்டது. பத்து மாதம் தன் குழந்தையைப் பாதுகாப்பாகச் சுமந்து பெற்றெடுக்கும் தாயைப் போலக் கடந்த 10 ஆண்டுகளாக இஸ்ரோ சுமந்து வந்த தனது இரண்டாவது குழந்தை சந்திரயான்-2. சுமார் ரூ.850 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள சந்திரயான்-2 திட்டம், சந்திரயான்-1 திட்டத்தைப் போல நிலவின் சுற்று வட்டப்பாதையிலிருந்து மட்டும் ஆய்வுகளைச் செய்யாமல் நிலவில் தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜூலை 15 அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் பாயவிருந்த சந்திரயான் 2 விண்கலத்தை ஏவும் திட்டம், கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தள்ளிவைக்கப்பட்டது.
-
Chandrayaan-2 launch, which was called off due to a technical snag on July 15, 2019, is now rescheduled at 2:43 pm IST on Monday, July 22, 2019. #Chandrayaan2 #GSLVMkIII #ISRO
— ISRO (@isro) July 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Chandrayaan-2 launch, which was called off due to a technical snag on July 15, 2019, is now rescheduled at 2:43 pm IST on Monday, July 22, 2019. #Chandrayaan2 #GSLVMkIII #ISRO
— ISRO (@isro) July 18, 2019Chandrayaan-2 launch, which was called off due to a technical snag on July 15, 2019, is now rescheduled at 2:43 pm IST on Monday, July 22, 2019. #Chandrayaan2 #GSLVMkIII #ISRO
— ISRO (@isro) July 18, 2019
இதற்காக மிகவும் விரிவான திட்டத்தை இஸ்ரோவானது தயார் செய்துள்ளது. இந்திய ராக்கெட்டுகளின் பாகுபலி, என்றழைக்கப்படும் சுமார் 400 டன் எடையும் 44 மீட்டர் உயரமும் கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 என்ற ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலம் செலுத்தப்படவுள்ளது. விரைவில் விண்ணில் பாயவுள்ள இந்த ராக்கெட் சரியாக 15 நிமிடங்கள் கழித்து விண்கலத்தைத் தனியே பிரித்துவிடும். மற்ற நாடுகளைப் போல நேரடியான பூமியிலிருந்து நிலவுக்கு ராக்கெட்டை அனுப்பாமல், முதலில் பூமியின் புவி வட்டப் பாதையைச் சுற்ற வைத்து, பின்னர் நிலவின் சுற்று வட்டப்பாதைக்குச் சந்திரயான் 2 விண்கலம் அனுப்பப்படுகிறது. இதன் மூலம் நேரடியாக பூமியின் புவிஈர்ப்பை எதிர்த்துச் செல்ல ஆகும் செலவில் ஒரு பகுதியில் முழுத்திட்டத்தையும் முடிக்கலாம். இந்த முறையைப் பின்பற்றுவதன் மூலம் ராக்கெட்டில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகளையும் குறைக்க முடியும்.
நமது ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3இலிருந்து பிரியும் விண்கலம் மூன்று முக்கியப் பகுதிகளால் ஆனது. முதலாவது, பிரியும் விண்கலத்தைப் பத்திரமாக நிலவுக்கு அழைத்துச் செல்வது வட்டமடிப்பான் (Orbitor), இரண்டாவது லேண்டர்(Lander) எனப்படும் தரையிறங்கி ஆகியவை ஆகும். இதற்கு, இஸ்ரோவுக்காக மாபெரும் சாதனைகளைப் படைத்த விஞ்ஞானி விக்ரம் சாராபாய் நினைவாக விக்ரம் என்று பெயரிடப்பட்டுள்ளது. விக்ரம்தான் சந்திரயான்-2இன் இதயமும் மூளையுமான உலவியைத் (Rower) தாங்கிச் செல்லும். மூன்றாவது மற்றும் முக்கிய பகுதியான இதற்கு பிரக்யான் என்று இஸ்ரோ பெயரிட்டுள்ளது.
நமது பூமியின் புவிவட்டப்பாதையில் 16 நாட்கள் சுற்றும் இது, இறுதியாக நிலவை நோக்கிய தன் பயணத்தை ஆரம்பிக்கும். மேலும் ஐந்து நாட்கள் பயணித்து தனது 21ஆவது நாளில் அது நிலவின் சுற்று வட்டப் பாதையைச் சென்றடையும். நிலவின் வட்டப்பாதையில் இதேபோல 27 நாட்கள் வட்டமிடும் சந்திரயான் சரியாக 54ஆவது நாளில் அதாவது செப்டம்பரில் நமக்குச் சோறு ஊட்டப் பயன்பட்ட நிலவை அடையவுள்ளது.
நிலவை அடையும் அந்த சிறு பயணமும் அவ்வளவு எளிய பயணமல்ல. அது பீக் ஹவர்சில் (Peak Hours) நமது அண்ணா சாலையைக் கண்ணைக் கட்டிக்கொண்டு கடப்பதைவிட ஆபத்தானது. 27 நாட்கள் நிலவின் புவி வட்டப்பாதையை வட்டமிடும் வட்டமடிப்பான் இந்தியாவின் நாயகன் விக்ரமை பத்திரமாகப் பிரித்து நிலவுக்கு அனுப்பும். இந்த வட்டமடிப்பானில் அமெரிக்காவின் விண்கலத்தையும் நாம் எடுத்துச் செல்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வட்டமடிப்பானிலுள்ள மற்றொரு இந்திய விண்கலம் ஒரு வருடம் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரிந்து செல்லும் நமது ஹீரோ விக்ரம் மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் நிலவின் தென் துருவத்தில் இறங்கவுள்ளது. இதுவரை நிலவுக்குச் சென்ற எந்தவொரு விண்கலமும் தென் துருவத்தில் இறங்கியதில்லை என்பது சந்திரயான்-2யின் மற்றொரு சிறப்பாகும். இந்த 15 நிமிட பயணம் மட்டும் வெற்றிகரமாக முடிந்து, விண்கலம் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டால் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்குப் பின் இச்சாதனையைச் செய்த நான்காவது நாடு என்ற பெருமையையும் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் விண்கலம் என்ற பெருமையை சந்திராயன் 2ம் அடையும்.
ஆறு சக்கரங்களையும் 27 கிலோ எடையையும் கொண்ட சந்திரயானின் மூளைப் பகுதியான பிரக்யான் என்றழைக்கப்படும் ரோவர் நிலவில் ஒரு நொடிக்கு ஒரு செமீ செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சக்கரங்களில் இந்தியாவின் கொடி பொறிக்கப்பட்டுள்ளது. இது நிலவில் செல்லும்போது நமது இந்தியாவின் கொடி, நிலவில் பதியும் வண்ணம் நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முற்றிலும் சூரிய ஒளியில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இது சரியாக 14 நிலவின் நாட்கள் அதாவது பூமியில் கணக்கிட்டால் ஒரு நாள் (24 மணிநேரம்) செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சந்திரயான்-1ஐப் போலவே மிகவும் குறைந்த செலவில் அதவாது ரூ.850 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது சந்திரயான்-2. சமீபத்தில் வெளியான ஹாலிவுட் திரைப்படமான 'அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்' திரைப்படத்தின் பட்ஜெட் ரூ.2,000 கோடி. இதை ஒப்பிட்டுப் பார்த்தால் நமது இஸ்ரோவின் சிக்கனம் நமக்குப் புரியும்.
இப்படிப் பல சிறப்புகளைக் கொண்ட சந்திரயான்-2 விண்கலத்தை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து இன்று (ஜூலை 22) மதியம் சரியாக 2.53 மணிக்கு விண்ணில் எடுத்துச் செல்லவுள்ளது இஸ்ரோவின் பாகுபலி.