கடந்த 2014-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்த சந்திரபாபு நாயுடு, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்தார்.
ஆனால், மத்திய அரசு இதை கண்டுகொள்ளாததால், கடந்த ஆண்டு (2018) பாஜகவின் கூட்டணியிலிருந்து சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது.
இந்நிலையில், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி டெல்லியில் உள்ள ஆந்திர பவனில் இன்று (பிப்.11) சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
அந்த உண்ணாவிரதத்தில், தெலுங்குதேச கட்சியின் எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும், சமூக மாணவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றுள்ளனர்.
முன்னதாக, சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர்களுடன் காந்தி சமாதிக்குச் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
போராட்டக்காரர்கள் ஏற்கனவே ஆந்திர மாநிலத்திலிருந்து டெல்லி தலைநகருக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டனர். இதற்காக ஆந்திர அரசு மக்கள் டெல்லிக்கு செல்வதற்காக இரண்டு இலவச சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி நாளை (பிப்.12) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து, மனு அளிக்கவுள்ளதாகவும் அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திரமோடி ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரமான அமராவதிக்கு நேற்று (பிப்.10) அடிக்கல் நாட்டினார். பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேச கட்சியினர் மாநிலம் முழுவதும் கறுப்புக் கொடிகள் காட்டியும், சுவரொட்டிகள் ஒட்டியும் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் ஆந்திர முதலமைச்சர் இன்று டெல்லியில் போராட்டம் தொடங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.