சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்திலிருந்து 50 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது ராம்பூர் கிராமம். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட இக்கிராமம், பூஜ்ஜிய குற்ற விகிதம் கொண்டதாக அறியப்படுகிறது.
இந்த கிராமத்திலிருந்து இதுவரை ஒரு குற்ற சம்பவம் கூட பதிவாகவில்லை எனவும், ஒரு முறை கூட குற்ற வழக்குகளை விசாரிப்பதற்காக இங்கு சென்றதில்லை எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். பல ஆண்டுகளாக இந்த கிராமத்தில் நடக்கும் சிறிய மோதல்களை பஞ்சாயத்து மூலமாகவே தீர்வு கண்டுள்ளனர். இவற்றில் காவல்துறையினர் தலையிட வேண்டிய அவசியம் ஏற்பட்டதில்லை என்கின்றனர் கிராம மக்கள்.
இதுபற்றி கோத்ரா சாலை காவல் நிலையத்தின் பொறுப்பாளர் ரூபக் சர்மா கூறுகையில், 'இங்குள்ள மக்கள் எளிமையானவர்கள், தங்களுக்குள் சகோதரத்துவ உணர்வைக் கொண்டுள்ளனர். அவர்கள் மிகவும் ஒழுக்கமானவர்கள், தங்களுக்குள்ளான பிரச்னைகளை அமைதியான முறையில் தீர்த்துக்கொள்கின்றனர். அதனால் இதுவரை இந்த கிராமத்திலிருந்து ஒரு குற்றம் கூட பதிவு செய்யவில்லை' என்கிறார்.