கோவிட்-19 பரவலால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை சீர் செய்ய மத்திய அரசு தற்சார்பு இந்தியா பொருளாதார சிறப்பு நிதி சலுகையை அறிவித்தது. 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த நிதித் திட்டம் மூலம் கிராம பொருளாதாரத்தை மேம்படுத்தே முக்கிய நோக்கம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டம் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளதாகக் காங்கிரஸ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கௌரவ் வல்லப் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், நாட்டில் தேவை குறைவு காரணமாக பொருளாதாரம் முடங்கியுள்ளது என நிபுணர்கள் ஆறு மாதங்களாக கூறிவந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போதுதான் இந்த உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.
அவசர அவசரமாக மத்திய அரசு தயார் செய்து அறிவித்த தற்சார்பு இந்தியா பொருளாதார நிதிச் சலுகை இந்தியாவின் பொருளாதார மேம்பாட்டிற்கு எந்தவித முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது.
பிரதமர் மற்றும் நிதியமைச்சர் கூறுவதால் மட்டுமே அறிவிப்புகள் எல்லாம் பொருளாதார மாற்றமாக மாறிவிடாது. மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது புதிய சலுகை அளித்துள்ளதாக அரசு கூறுகிறது. கூடுதல் பணத்தை செலவழித்து சலுகைத் தராமல், ஏற்கனவே வழங்கப்பட்ட சலுகையை வேறு வடிவத்தில் மாற்றுவதில் பெரிய பயன் எதுவும் கிடைக்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பஞ்சாப் முதலமைச்சருக்கு எச்சரிக்கை விடுத்த சிரோமணி அகாலி தளம்