ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களை மேற்கோள்காட்டி கூடுதல் ராணுவம் குவிக்கப்பட்டது. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு ஓராண்டு நிறைவுபெற்ற நிலையில், அங்கு குவிக்கப்பட்டிருந்த துணை ராணுவப் படையைச் சேர்ந்த 12 ஆயிரம் வீரர்கள் தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளனர்.
இது குறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "மத்திய ரிசர்வ் காவல் படை, எல்லை பாதுகாப்புப் படை, மத்திய தொழில் காவல் படை, சாஸ்த்ரா சீமா பால் (SSB) உள்ளிட்ட மத்திய ஆயுதக் காவல் படைகள், மறு சீராய்வுக்கு பின்னர் ஜம்மு காஷ்மீரிலிருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்த அறிக்கை, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஓராண்டு காலத்தில் வன்முறை சம்பவங்கள் குறைந்துள்ளதாகவும் அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு, ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலக்கட்டத்தில், கல்வீச்சால் அப்பாவி மக்கள் தாக்கப்படுவது 87 விழுக்காடாகக் குறைந்துள்ளது. கல்வீச்சால் ஏற்படும் உயிரிழப்புகள் 62 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
முன்னதாக, 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், ஜம்மு காஷ்மீர், புல்வாமாவில், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதில், மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இதுபோன்ற மேலும் பல தாக்குதல்கள் அங்கு நிகழ்த்தப்படவுள்ளதாக புலனாய்வு அமைப்பு தகவல் தெரிவித்திருந்தது. அதனையடுத்தே அங்கு துணை ராணுவம் குவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தளபதி சுட்டுக்கொலை!