கரோனா பரவல் நாடு முழுவதும் குறைந்துவரும் நிலையில், சில மாநிலங்கலில் அதன் இரண்டாம் அலை தொடங்கியுள்ளதாக அச்சம் கொள்ளப்படுகிறது. இந்நிலையில், கரோனா சூழலை கண்காணிக்கும் வகையில் மத்திய அரசின் உயர்மட்ட குழு உத்தரப் பிரதேசம், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு விரைந்துள்ளது.
கரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களுக்கு மத்திய அரசின் உயர்மட்ட குழு சென்று மாநில அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை மேலும் பலப்படுத்தும். கட்டுப்பாடுகள், கண்காணிப்பு, கரோனா சோதனை, நோய் தடுப்பு ஆகியவற்றை மேற்பார்வையிடும். கரோனாவால் ஏற்படும் சவால்களை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து மாநில அரசுக்கு ஆலோசனை வழங்கும்.
கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரை முன்னின்று நடத்தும் மத்திய அரசு, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மேற்கொள்ளும் முயற்சிகளை மேலும் பலப்படுத்த கரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளுக்கு மத்திய அரசின் உயர்மட்ட குழுவை அனுப்பி கண்காணித்துவருகிறது.
முன்னதாக, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தலைமையிலான மூன்று பேர் கொண்ட மத்திய உயர் மட்ட குழு ஹரியானாவுக்கு சென்றது. அதேபோல், நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் மருத்துவர் வி.கே. பால் தலைமையிலான குழு ராஜஸ்தானுக்கும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மைய இயக்குநர் எஸ்.கே. சிங் தலைமையிலான குழு குஜராத்திற்கும் சென்றது. சுகாதார சேவைகள் இயக்குநரகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் எல். ஸ்வஸ்திசரண் தலைமையிலான குழு மணிப்பூருக்கு சென்று ஆய்வு மேற்கொண்டது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் டெல்லியில் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. எனவே, கரோனாவின் தாக்கம் அதிகமுள்ள தேசிய தலைநகர் பகுதி, ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய பகுதிகளுக்கு சென்ற மத்திய அரசின் உயர்மட்ட குழு முன்னதாக ஆய்வு மேற்கொண்டது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.