கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு முன்னெடுத்துச் செல்வதுடன், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு நிதியுதவி அளித்து ஆதரவாகவும் செயல்பட்டுவருகிறது. அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி அவசர கால உதவி மற்றும் சுகாதார நடைமுறை ஆயத்த நிலை தொகுப்புத் திட்டத்திற்காக 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று அறிவித்தார்.
இந்தத் திட்டத்தின் முதல் தவணையாக மத்திய அரசு 3 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கியது. அதன் மூலம் மருத்துவமனைக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துதல், அத்தியாவசிய உபகரணங்கள், மருந்துகள் உள்ளிட்ட பொருள்கள் கொள்முதல் செய்தல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான இரண்டாம் தவணை கரோனா அவசர நிதியாக 890.32 கோடி ரூபாயை விடுவிக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இந்த நிதியுதவியை சத்திஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், கோவா, கர்நாடகா, கேரளா, பஞ்சாப், தமிழ்நாடு, மேற்கு வங்கம், அருணாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா, மனிப்பூர், மிசோரம், சிக்கிம் ஆகிய மாநிலங்கள் பெறவுள்ளன.
கரோனா பாதிப்பிற்கேற்ப மாநிலங்களுக்கான மத்திய அரசின் நிதியுதவி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டாம் தவணை நிதியை, பொதுச் சுகாதார உள்கட்டமைப்பைப் பலப்படுத்தும் வகையில் பி.சி.ஆர். இயந்திரங்கள், ஆர்.என்.ஏ. பிரித்தெடுக்கும் கருவிகள், ஐ.சி.யூ. படுக்கைகளின் சிகிச்சை, ஆக்ஸிஜன் ஜெனரேட்டர்களை நிறுவுதல், படுக்கை ஓரத்தில் ஆக்ஸிஜன் செறிவுகளை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ள மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்தத் தொகுப்பு நிதியின் ஓர் அங்கமாக மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 5 லட்சத்து 80 ஆயிரத்து 342 தனிமைப்படுத்தும் படுக்கைகள், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 1 லட்சத்து 36 ஆயிரத்து 68 படுக்கைகள், 31 ஆயிரத்து 255 தீவிரச் சிகிச்சைப் பிரிவு படுக்கை வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் 86 லட்சத்து 88 ஆயிரத்து 357 பரிசோதனை உபகரணங்கள், 79 லட்சத்து 88 ஆயிரத்து 366 வி.டி.எம். சாதனங்களை வாங்கியுள்ளன. மேலும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 96 ஆயிரத்து 557 மருத்துவ அலுவலர்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டு, 6 லட்சத்து 65 ஆயிரத்து 799 மணி நேர உழைப்புக்கான ஊக்கத் தொகை அளிக்கப்பட்டுள்ளது. 11 ஆயிரத்து 821 அலுவலர்களுக்கு பயண உதவிகளை வழங்கவும் இந்த நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சாதியால் நேர்ந்த கொடூரம்: காதலர்கள் குடிசைக்குள் பூட்டி எரிப்பு!