விவசாயிகளின் போராட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு போராட்டக்காரர்கள் டெல்லிக்குள் நுழையாதவாறு இரும்பு முள்வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ட்விட்டரில் விவசாயிகள் இனப்படுகொலை என்று ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகிவருகின்றன. இதையடுத்து, விவசாயிகள் போராட்டம் குறித்த சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்க ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, விவசாயிகள் இனப்படுகொலை என்று உலாவும் ஹேஷ்டேக்குகளை பதிவிடும் கணக்குகளை முடக்க வேண்டும் எனவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ட்விட்டர் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மத்திய அரசின் உத்தரவின் பேரில் 250க்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன. இருப்பினும், அந்த இடைக்கால தடையை ட்விட்டர் நிறுவனம் இன்று திரும்பபெற்றது.