எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அணை பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா, நாடு முழுவதும் நதிநீர் பிரச்னைகளுக்கு ஒரே தீர்ப்பாயம் அமைக்கும் சட்டத் திருத்த மசோதா ஆகியவை மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் ரவிக்குமார் நமது ஈடிவி பாரத் செய்தியாளருக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "இரண்டு நாட்கள் முன்பு தான் அணை பாதுகாப்பு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டு மசோதாக்கள் மீதான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த இரண்டு மசோதாக்களும் அவசர அவசரமாக கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த மசோதாக்கள் இரண்டுமே தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக அமைந்திருக்கிறது.
எங்கள் மாநிலத்தில் ஓடும் பல ஆறுகள் இரண்டு மாநிலங்களுக்கு சொந்தமானவையாக உள்ளது. ஏற்கனவே, நதி பங்கீட்டில் தமிழ்நாட்டிற்கும், மற்ற மாநிலங்களுக்கும் பிரச்னை இருக்கிறது. இப்போது கொண்டுவந்துள்ள தீர்ப்பாயம் மூலம் ஏற்கனவே அமைக்கப்பட்ட பல தீர்ப்பாயங்கள் கலைக்கப்படவுள்ளது. இதன் மூலம் மாநிலங்களின் தன்னாட்சியை மோடி அரசு ஒடுக்குகிறது" என்றார்.