மத்திய அமைச்சரவையின் நியமன குழு செயலர்களாக தேர்வு செய்யப்பட்ட ஐஏஎஸ் அலுவலர்களின் பெயர் பட்டியலை நேற்று வெளியிட்டது. இந்தச் செயலர்கள் பதவிகளுக்கு மொத்தம் 73 ஐஏஎஸ் அலுவலர்கள் தேர்வாகியுள்ளனர். அவர்களில் 41 பேர் செயலர்கள், அதற்கு இணையான பதவிகளுக்கும் 32 பேர் கூடுதல் செயலர்கள் அல்லது அதற்கு இணையான பதவிகளுக்கும் தேர்வாகியுள்ளனர்.
இதில் செயலர்கள் பதவிக்கான பெயர் பட்டியலில் ஜம்மு காஷ்மீரின் தற்போதைய தலைமைச் செயலர் பி.வி.ஆர். சுப்பிரமணியம், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைவர் என்.என். சின்ஹா, டெல்லி தலைமைச் செயலாளர் விஜய் தேவ் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
தேர்வு செய்யப்பட்ட செயலர்களில் 1985ஆம் ஆண்டு ஐஏஎஸ் பதவியேற்ற ராஜஸ்தானைச் சேர்ந்த அலுவலர் உஷா சர்மாவே மிகவும் மூத்த அலுவலராக உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக கேரள ஐஏஎஸ் அலுவலர் டபிள்யூ.ஆர். ரெட்டி (1986) இருக்கிறார். பிற அலுவலர்கள் அனைவரும் 1987ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வென்றவர்கள் ஆவர்.
மேலும் கூடுதல் செயலர் பதவிக்கு தேர்வுசெய்யப்பட்ட 32 ஐஏஎஸ் அலுவலர்களில் 25 பேர் கூடுதல் செயலர்கள் அல்லது அதற்கு இணையான பதவிகளில் தேர்வு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் அதில் ஏழு பேரின் பெயர்கள் கூடுதல் செயலர்கள் பதவிக்கு மட்டுமே தேர்வாகியுள்ளது.
இந்தச் செயலர், கூடுதல் செயலர்கள் தேர்வு பட்டியலில் பிரவீன் குமார், டி.வி. சோமநாதன், என். முருகானந்தம், எஸ். கோபாலகிருஷ்ணன், சுப்ரியா சாகு ஆகிய தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐஏஎஸ் அலுவலர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.