நாட்டில் உள்ள எளிய மக்களுக்கு உணவு தானிய விநியோகத்தை உறுதி செய்யும் விதமாக அந்தியோத்தயா அன்ன யோஜ்னா செயல்பட்டுவருகிறது. உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இந்த திட்டம் செயல்படும் நிலையில், இந்தத் திட்டத்தில் பார்வை திறனற்றவர்களையும் சேர்க்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.
இதையடுத்து பார்வை திறனற்றவர்களை இந்தத் திட்டத்தில் சேர்த்து அவர்களுக்கு 35 கிலோ மானிய உணவு தானியம் வழங்க வேண்டும் என மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து மாநில அரசுகளும் இந்தத் திட்டத்தை முறையாக அமல்படுத்தி அவர்களுக்கு உணவு தானிய விநியோகத்தை உறுதி செய்யவேண்டும் எனக் கூறிய அவர், மத்திய அரசின் உத்தரவின்படி வரும் நவம்பர் வரையிலான காலக்கட்டத்திற்கு உணவு தானியம் இலவசமாக வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டில் உள்ள 81 கோடி பேர் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயனடைந்து வருவதாகவும், இந்தச் சட்டத்தில் அரசு எந்த மாற்றமும் செய்யவில்லை எனவும் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தேர்தலுக்கு தயாராகும் மம்தா: கட்சியில் அதிரடி மாற்றங்கள்