இந்தியாவில் கரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்து 88 ஆயிரத்து 611ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 42 ஆயிரத்து 518 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 933 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட எட்டு மாநிலங்களைச் சேர்ந்த 13 மாவட்டங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதில், அசாமில் கம்ரூப், பிகாரில் பாட்னா, ஜார்க்கண்ட்டில் ராஞ்சி, கேரளாவில் ஆலப்புழா மற்றும் திருவனந்தபுரம், ஒடிசாவின் குஞ்சம், உத்தரப் பிரதேசத்தில் லக்னோ, மேற்கு வங்கத்தில் 24 பாராக்னாஸ் நார்த், ஹூக்லி, ஹவுரா, கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இந்தப் பகுதிகளிலிருந்து மட்டுமே 9 சதவிகிதம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் இந்த எட்டு மாநிலங்ளில்தான் குறைந்த அளவில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எட்டு மாநிலங்களைச் சேர்ந்த கரோனா கண்காணிப்பு அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள், சிறப்பு மருத்துவ அலுவலர் ஆகியோர் பங்கேற்றனர்.
அந்தக் கூட்டத்தில் இறப்பு சதவிகிதத்தைக் குறைப்பது தொடர்பாகவும், கரோனா பரிசோதனையை அதிகப்படுத்தவும் ஆலோசனை வழங்கப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் ஆம்புலன்ஸ் வசதியை உறுதிப்படுத்துதல், அறிகுறியற்ற கரோனா நோயாளிகளைக் கண்காணித்தல், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களைக் கண்காணித்தல் ஆகிய நடவடிக்கைகளை அதிகரிக்க உத்தரவிடப்பட்டது.
மேலும் கரோனா தடுப்பு நடவடிக்கையை மேம்படுத்தவும், கையிருப்பில் உள்ள மருத்துவ உபகரணங்களைச் சரியாகப் பயன்படுத்தவும் அரசு அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மத்திய இணை அமைச்சர் கைலாஷ் சௌத்ரிக்கு கரோனா பாதிப்பு