நாட்டின் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்டுவதற்கான ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக, விருப்பம் தெரிவித்த ஏழு நிறுவனங்களில், மூன்று நிறுவனங்களை ஆன்லைன் ஒப்பந்தப் புள்ளி விவரங்கள் சமர்ப்பிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.
லார்சன் அண்ட் டூப்ரோ (எல் அண்ட் டி), ஷபூர்ஜி பல்லோன்ஜி & கம்பெனி பிரைவேட் லிமிடெட் மற்றும் டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் ஆகியவை புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தத்தைப் பெற தகுதியுடையவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டடம் தேசியத் தலைநகரில் உள்ள நாடாளுமன்ற மாளிகை அருகே 118ஆவது பிளாட்டில் கட்டப்படவுள்ளது. மத்திய பொதுப்பணித் துறை அறிவிப்பின்படி, கட்டுமானப் பணிகளுக்காக ஜூலை14ஆம் தேதி ஒப்பந்தம் கோரப்பட்டது. ஆவணங்களின் மதிப்பீடு மற்றும் ஆய்வின் அடிப்படையில் ஆன்லைன் ஒப்பந்தப் புள்ளி விவரங்கள் சமர்ப்பிக்க மூன்று நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்தின் இந்த புதிய கட்டடம் இரண்டு மாடியைக் கொண்டிருக்கும். இந்தியாவின் 75ஆவது சுதந்திர ஆண்டு கொண்டாட்டத்திற்கு முன் அதாவது 2022ஆம் ஆண்டிற்குள் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டி முடிக்கப்படவுள்ளது.