பிப்ரவரி மாதம், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், நாடு முழுவதும் மக்களிடம் ஆலோசனை கேட்டுவருவதாக மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற தி இன்ஸ்டிடியூட் ஆப் கம்பெனி செக்ரட்டரீஸ் ஆப் இந்தியாவின் 48ஆவது மாநாட்டில் கலந்துகொண்ட அவர், "நகரில் உள்ள அரசு அலுவலர்கள், வணிகர்கள் ஆகியோரை சந்தித்து நிதிநிலை அறிக்கை குறித்த அவர்களின் எதிர்பார்ப்புகள் குறித்து கேட்டறிந்தோம்.
ஆத்ம நிர்பார் பாரத் திட்டமான 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பொருளாதாரத்தால் இந்தூர் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் வணிக நிறுவனங்கள் அதிகரிக்கின்றன. அரசு அலுவலர்கள் மற்றும் வணிகர்களின் குறைகள் குறித்து கேட்டறிந்தோம். நிதிநிலை அறிக்கை குறித்து அவர்களும் முக்கியமான ஆலோசனைகள் கூறினார்கள். நாடு முழுவதும் ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது. டெல்லியில் இதுகுறித்து கூட்டங்கள் நடைபெற்றுவருகிறது. இணையம் மூலம் மக்கள் ஆலோசனைகளை அனுப்பிவருகின்றனர்" என்றார்.