டெல்லி: தீபாவளியை முன்னிட்டு 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தப் பணம், தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட உள்ளது.
இது குறித்து டெல்லியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் புதன்கிழமை (அக்.21) கூறுகையில், “இந்தப் பணம் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் ஒரே தவணையாக செலுத்தப்படும். இதற்காக மூன்று ஆயிரத்து 737 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.
கரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு மத்தியில் மத்திய அரசு தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்படவுள்ளது. கோவிட்-19 காரணமாக 2018-21 ஆம் ஆண்டின் தற்போதைய நிலையில் ஊழியர்கள் எல்.டி.சி (பயணச் சலுகை) பெறும் நிலையில் இல்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
மேலும், ப்ரீபெய்ட் ரூபே அட்டை வடிவில் அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் ரூ .10 ஆயிரம் வழங்கும் திட்டத்தையும் அறிவித்தார். இதுமட்டுமின்றி மாநில அரசுகளின் மூலதனச் செலவை அதிகரிப்பதற்காக, மாநிலங்களுக்கு ரூ.12 ஆயிரம் கோடி சிறப்பு வட்டி இல்லாத 50 ஆண்டுக்கால கடன் திட்டத்தையும் அரசாங்கம் அறிவித்தது.
அதற்காக ரூ .4.13 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது நினைவுக் கூரத்தக்கது.