ஜூன் 1ஆம் தேதி முதல் இயக்கப்படும் 100 ரயில்கள் குறித்த விவரங்கள் வெளியானதைத் தொடர்ந்தும், உள்நாட்டு விமான போக்குவரத்து மே 25 முதல் தொடங்கும் என விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்ததையடுத்தும் உள்நாட்டு பயணங்களுக்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில், "உள்நாட்டிற்குள் பயணம் செல்பவர்கள் ஆரோக்யா சேது செயலியை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளவேண்டும். ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்களில் பயணிகளின் வெப்ப அளவினைக் கண்டறிய அந்தந்த மாநில அரசுகள் ஏற்பாடு செய்யவேண்டும்.
கரோனா அறிகுறியற்ற பயணிகளை மட்டும் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். மேலும், அவ்வாறு பயணம் செய்பவர்கள் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கிக் கொள்ளவேண்டும். பயணம் முடிந்து தனிமைப்படுத்திக்கொள்ளும் காலத்தில் ஏதேனும் கரோனா அறிகுறி தென்பட்டால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கோ, மாநில அல்லது மத்திய கரோனா தொடர்பு மையத்திற்கோ(1075) தகவல் அளிக்கவேண்டும்.
பயணிகள் பயணத்தின்போது முகக் கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். பயணத்தின் போது கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். மேலும், சுற்றுப்புற சுகாதாரத்தையும் பேணவேண்டும்.
கடுமையான கரோனா அறிகுறிகளைக் கொண்டவர்கள் பிரத்யேக கோவிட்-19 சிறப்பு பிரிவுகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள். லேசான கரோனா அறிகுறிகளைக் கொண்டவர்கள் அவர்களது வீடுகளிலோ அல்லது கோவிட்-19 சுகாதார மையங்களிலோ தனிமைப்படுத்தப்படுவார்கள்.
யாருக்கேனும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்கப்படும். கரோனா தொற்று இல்லாதவர்கள் தங்களது வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அவ்வாறு செல்பவர்கள் ஏழு நாள்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும். பயணிகளை தனிமைப்படுத்துதல் குறித்து மாநிலங்கள் சொந்த நெறிமுறையை உருவாக்கிக்கொள்ளலாம்" என அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இணையத்தில் கசிந்த 2.9 கோடி இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள்!