உத்தரப் பிரதேசம், ஹத்ராஸ் என்ற பகுதியில் இளம் பெண் ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
அப்பெண்ணின் உடலையும் பெற்றோருக்கு அளிக்காமல் உத்தரப் பிரதேச காவல் துறையினர் நள்ளிரவில் எரியூட்டினர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
இது தொடர்பான வழக்கை தற்போது சிபிஐ விசாரணை செய்துவருகின்றனர். இந்நிலையில், ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட பெண் (செப். 14) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் பதிவான சிசிடிவி காட்சிகளை மருத்துவமனை நிர்வாகத்திடம் சிபிஐ கோரியிருந்தது.
ஆனால், மருத்துவமனையில் பதிவாகும் சிசிடிவி காட்சிகள் ஏழு நாள்களுக்கு மட்டுமே சேமிக்கப்பட்டிருக்கும் என்றும் அதன் பின் அவை தானாக அழிந்துவிடும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காவல் துறையினர் ஏதாவது குறிப்பிட்டு தெரிவித்தால் மட்டும், அந்த நாளின் சிசிடிவி காட்சிகள் அது சேமித்து வைக்கப்படும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அவருடன் யார் இருந்தார், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் யார் உள்ளிட்டவை குறித்து அறிந்துகொள்ள உதவியாகவிருக்கும் என்று சிபிஐ தரப்பில் தெரிவித்தனர்.
சமீப காலங்களில் சிசிடிவி காட்சிகள் இல்லாத காரணத்தினால் சிபிஐயின் விசாரணை தடைபடுவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான விசாரணையிலும் மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகள் இல்லாத காரணத்தினால் சிபிஐ விசாரணையில் சிக்கல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஹத்ராஸ் சம்பவம் சித்தரிக்கப்பட்ட ஒன்று - பாஜக எம்பி சர்ச்சைக் கருத்து!