வரும் பிப்ரவரி 1ஆம் தேதி, நிதிநிலை அறிக்கைத் தாக்கல்செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஜனவரி 29ஆம் தேதி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இரு அவை உறுப்பினர்களும் அடங்கிய கூட்டுக்குழுக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.
நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடர், இரண்டு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கும் முதல் கூட்டத் தொடர் ஜனவரி 29ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 15ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இரண்டாவது கூட்டத் தொடர் மார்ச் 8ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத்திற்கான அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளது. முன்னதாக, கரோனா காரணமாக குளிர்காலக் கூட்டத் தொடர் ரத்துசெய்யப்பட்டது. கூட்டத்தொடரை ரத்துசெய்வதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளித்ததாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்திருந்தார்.
ஆனால், இது தொடர்பாகத் தங்களை ஆலோசிக்கவில்லை எனவும் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டம் குறித்த கேள்விகளைத் தவிர்ப்பதற்காக கூட்டத் தொடர் ரத்துசெய்யப்பட்டதாகவும் காங்கிரஸ் விமர்சனம் செய்தது.
கடந்தாண்டு செப்டம்பர் மாதம், 17 மக்களவை உறுப்பினர்களும் எட்டு மாநிலங்களவை உறுப்பினர்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.