கன்னட திரையுலகில் போதைப்பொருள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து வரும் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு அலுவலர்கள் (சிசிபி), நடிகை ராகினியின் வீட்டின் இன்று காலை சோதனையிட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
ராகினியின் வீட்டில் சோதனை நடத்த நீதிமன்றத்தில் இருந்து முறையாக வாரண்ட் பெறப்பட்டதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து இன்று காலை ஆறு மணியளவில் மத்தியக் குற்றப்பிரிவு அலுவலர்கள் ராகினியின் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர்.
அதைத்தொடர்ந்து, அவர் போதைப்பொருள் வழக்கு தொடர்பான விசாரணைக்காக இன்று பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு (சிசிபி) கொண்டு செல்லப்பட்டார்.
முன்னதாக மத்திய குற்றப்பிரிவினர் கடந்த புதன்கிழமை (செப்02) நடிகை ராகினிக்கு நோட்டீஸ் அனுப்பினர். அதில் வியாழக்கிழமைக்குள் (செப்.03) ராகினி நேரில் ஆஜராகும்படி கூறப்பட்டிருந்தது. ஆனால், வரும் திங்கள் கிழமை வரை நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு, ராகினி தனது வழக்கறிஞர் மூலம் கேட்டிருந்தார். இருப்பினும், ராகினியை இன்று ஆஜராகும்படி சிபிசி அறிவுறுத்தியிருந்தது.
கன்னடத் திரையுலகில் நெருங்கிய தொடர்புடைய ரவி என்பவரை போதைப்பொருள் வழக்கு தொடர்பாக கைது செய்துள்ளதாகவும், அவரை ஐந்து நாள்கள் காவலில் எடுத்து விசாரித்து வருவதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னடத் திரையுலகை சேர்ந்தவர்களுக்கு போதைப்பொருள் வழங்கியதாக பெங்களூருவைச் சேர்ந்த மூன்று பேரை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) கைது செய்ததது. இதைத்தொடர்ந்து, கன்னடத் திரையுலகில் பரவியுள்ள போதைப்பொருள் விற்பனை குறித்த விசாரணையை மத்திய குற்றப்பிரிவினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
திரைப்பட தயாரிப்பாளரும் பத்திரிகையாளருமான இந்திரஜித் லங்கேஷ், கன்னடத் திரையுலகில் இருக்கும் போதைப்பொருள் புழக்கம் குறித்த தனது வாக்குமூலத்தை மத்திய குற்றப்பிரிவினருக்கு அளித்துள்ளார். கன்னடத் திரையுலகில் குறைந்தது 15 பேர் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மும்பை 'பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர்' போல் தெரிகிறது - கங்கனா ரணாவத்