பெங்களூருவில் போதைப்பொருள்கள் விநியோகம் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், பல கன்னட திரைப்படக் கலைஞர்கள் போதைப்பொருள் வழக்கில் சிக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, மத்தியக் குற்றப்பிரிவும், காவல் துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் போதைப் பொருள்களை ரகசியமாக விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (செப்.18) எக்ஸ்டஸி மாத்திரைகள், எல்.எஸ்.டி, மரிஜுவானா பூசப்பட்ட ஜெல்லி போன்ற சட்டவிரோத போதைப்பொருள்களை வைத்திருந்த இரண்டு நபர்களை மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், எத்தனை கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
முன்னதாக நேற்று (செப்.17) சுமார் 50 லட்சம் மதிப்புள்ள 90 கிலோ கஞ்சாவை சட்டவிரோதமாக வைத்திருந்த மூன்று இளைஞர்களை சிசிபி போலிஸ் பெங்களூரில் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.