சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு தொடர்பாக, கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் சிபிஐ விசாரணை நடத்தக்கூடாது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் உதவியை சிபிஐ நாடியபோது, ஷில்லாங் நகரில் சிபிஐ விசாரணைக்கு ராஜீவ் குமார் ஆஜராக வேண்டும் என்று உத்தவிட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பின் அடிப்படையில் நேற்று ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அவர் ஆஜரானார். தொடர்ந்து 8 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அதன் பின்னர், ஆணையர் ராஜீவ் குமார் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில் சிபிஐ விசாரணை தொடரும் என்று கூறியதைத் தொடர்ந்து, இன்று திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. குணால் கோஷிடமும் சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சிபிஐ அலுவலகத்திற்கு வந்த முன்னாள் எம்.பி. குணால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, சிபிஐ தன்னை ஆஜராகுமாறு அழைத்ததாகவும், அதனால் சிபிஐ அலுவலகம் வந்தததாகவும் தெரிவித்தார். மேலும், தான் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் கூறினார்.