காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் தயாரித்த 12 ஹெலிகாப்டர்களை குடியரசு தலைவர், பிரதமர் போன்ற வி.வி.ஐ.பிகளுக்கு வாங்க முடிவு செய்து, 2010ஆம் ஆண்டு 3600 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தை பெற இந்திய அமைச்சர்களுக்கு லஞ்சம் அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதற்கிடையே, அகஸ்தா வெஸ்ட்லாண்ட் தொடர்புடைய மற்றொரு பணமோசடி வழக்கும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ரத்துல் பூரியின் காவலை நீட்டிக்க அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய் கார்க், ரத்துல் பூரியின் காவலை நான்கு நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். அமலாக்கத் துறை ரத்துல் பூரியை ஆகஸ்ட் 20ஆம் தேதி கைது செய்தது குறிப்பிடத்தக்கது.