வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் அவரது அமைச்சரவையில் முதலீட்டுத் துறை அமைச்சராக இருந்தவர் அருண் ஷோரி. இவர் அமைச்சராக இருந்தபோது ஏகப்பட்ட அரசு நிறுவனங்களின் பங்குகளும், நிலங்களும் தனியாருக்கு விற்கப்பட்டன.
ராஜஸ்தான் மாநிலத்தில் புகழ்பெற்ற லக்ஷ்மி விலாஸ் மஹால் என்ற ஹோட்டலை அரசு நிர்வகித்துவந்தது. சுமார் 252 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த ஹோட்டல், வெறும் 7.5 கோடி ரூபாய்க்கு தனியார் நிறுவனத்திற்கு கடந்த 2002ஆம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டது.
இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரி, முதலீட்டுத் துறை செயலர் பிரதீப் பைஜால் உள்பட ஐந்து பேர் மீது 2014ஆம் ஆண்டு முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போதிய ஆதாரம் இல்லை என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், அரசுக்கு 244 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதற்காக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரி, முதலீட்டுத் துறை செயலர் பிரதீப் பைஜால் உள்பட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: கரோனா வைரஸ் குறித்து விவாதிக்க நேரம் மறுப்பு... மாநிலங்களவையில் கொந்தளித்த திருச்சி சிவா