இந்தோ-வங்கதேச எல்லைப் பகுதியில் கால்நடைகள் கடத்தல் நடைபெறுவதாக காவல் துறைக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து, காவல் துறையினரும், எல்லைப் பாதுகாப்பு படையினரும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அசாமின் துப்ரி மாவட்டத்தில் அதிகாலையில் கோலக்கஞ்ச் எல்லை வழியாக வங்கதேசத்திற்கு கால்நடைகள் கடத்துவதை காவல் துறையினர் கண்டறிந்தனர். உடனடியாக மாடுகளை கடத்தும் கும்பலை நோக்கி காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அப்போது கடத்தல்காரர்கள் கங்காதர் ஆற்றில் குதித்து தப்பிச் சென்றனர். அவர்களிடமிருந்து 42 மாடுகளையும் காவல் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
இதேபோன்று, எல்லைப் பாதுகாப்புப் படையினரும் (பி.எஸ்.எஃப்) சர்வதேச எல்லையில் கால்நடை கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளனர். அவர்கள் சுமார் 150 மாடுகளை மீட்டுள்ளனர். இதனால், ஒரே நாளில் மாவட்டத்தின் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக நடந்த கால்நடைகள் கடத்தல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.