தெலங்கானா மாநிலம் மெட்சல் மாவட்டத்தில் 16 வயதுடைய சிறுமிக்கு திருமணம் நடத்தியிருப்பதாக குழந்தைகள் மேம்பாட்டு ஆணையத்தின் மேற்பார்வையாளர் அனுராதாவிற்கு தகவல் கிடைத்தது.
குண்ட்லபோகம்பள்ளி அருகே மெட்சல் மாவட்டத்தின் காண்ட்ல கோயாவில் உள்ள மாதா கோயிலில் ஜூன் 1ஆம் தேதியன்று 16 வயது சிறுமியை 21 வயது இளைஞனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த திருமணத்திற்கு உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சட்ட விரோதமான திருமணத்தில் தொடர்புடைய மணமகன், மணமகனின் பெற்றோர், திருமணத்தை நடத்தி வைத்த பூசாரி ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மெட்சல் காவல்நிலையத்தின் உதவியை அனுராதா நாடியுள்ளார்.
இது குறித்து மெட்சல் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பிரவீன் ரெட்டி கூறுகையில், “குழந்தைகள் மேம்பாட்டு ஆணையத்திலிருந்து அனுராதா எங்களைத் தொடர்பு கொண்டதும் அது குறித்து விசாரணை மேற்கொண்டோம். இத்திருமணம் ஜூன் 1ஆம் தேதி நடைபெற்றது. 21 வயதுடைய இளைஞன் சிவராத்திரி சீனு, 16 வயது சிறுமி இருவரும் காதலித்துள்ளனர். இதையடுத்து, இருவீட்டாரும் பேசி இந்த திருமணத்தை காண்ட்ல கோயாவில் நடத்தியுள்ளனர். இதற்கு ஊரிலிருக்கும் முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவர் தலைமையேற்றுள்ளார்” என்றார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, “ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வழிபாட்டுத் தலத்தில் திருமணத்தை நடத்தியுள்ளனர். சட்ட விரோதமாக சிறுமியை திருமணம் செய்த காரணத்திற்காக சீனு, அவருடைய பெற்றோர், சிறுமியின் பெற்றோர், அரசியல் பிரமுகர், பூசாரி ஆகியோரை கைது செய்துள்ளோம். திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமியின் வயதையும், எதிர்காலத்தையும் கணக்கில் கொண்டும் மத்திய அரசின் கீழ் இயங்கும் சகி மையத்திற்கு சிறுமி அனுப்பி வைக்கப்பட்டார்” என்றார்.
இதையும் படிங்க: புதுக்கோட்டை சிறுமி கொலை வழக்கு: பெண் மந்திரவாதி கைது