தெலங்கானா மாநிலம் வாராங்கால் அருகேயுள்ள ஹனம்ஹொண்டா குமாரபள்ளி பகுதியை சேர்ந்தவர் 25 வயது இளைஞர் போல்பகா பிரவீன் என்ற பவான். இவர் கடந்தாண்டு ஜூன் 18ஆம் தேதி, அப்பகுதியிலுள்ள ஒன்பதே வயதான குழந்தையை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்து கொன்றார்.
பிரவீனின் இருப்பிடத்தை சில மணி நேரத்தில் குழந்தையை காணாமல் தவித்த பெற்றோர் கண்டுபிடித்து விட்டனர். அதற்குள் பிரவீன் குழந்தையை கொன்றுவிட்டார். இந்த வழக்கு, விசாரணை நீதிமன்றத்தில் நடந்தது.
வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் 48 நாள்களுக்குள் (ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி ) தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில் பிரவீனுக்கு உச்சப்பட்ட தண்டனையாக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்தத் தண்டனையை எதிர்த்து பிரவீன் தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை வாழ்நாள் ஆயுள் சிறை தண்டனையாக மாற்றி தீர்ப்பளித்தது.
கடந்தாண்டு நவம்பர் 12ஆம் தேதி வெளிவந்த இந்த தீர்ப்புக்கு எதிராக மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் கே.எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாலியல் குற்றவாளிக்கு உச்சப்பட்ச தண்டனை அளிக்க மறுப்பு தெரிவித்துவிட்டனர்.
நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், “பிரவீன் கடைசி மூச்சு வரை ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று மாநில உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை பொருத்தமானதாக கருதுகிறோம். அந்த தீர்ப்பில் தலையிட்டு விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுபடியும் வழங்க விரும்பவில்லை” என்றனர்.
இந்த வழக்கு விசாரணையின் போது மாநில அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், “2019 ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் பாலியல் குற்றங்களில் குழந்தைகளை பாதுகாத்தல் (போக்சோ2012) சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு மரண தண்டனை விதிக்க வழிவகுக்கிறது” என ஆதாரங்களை சமர்ப்பித்து வாதாடினார்.
எனினும் மாநில அரசின் கருத்துக்கு உடன்பட மறுத்து, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.
இந்திய நாடாளுமன்றம் போக்சோ சட்டத்திருத்தம் கொண்டுவருவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த கொடூர குற்றம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பெண்களிடம் கூட்டுப் பாலியல் கொடுமை: காணொலி எடுத்து பணம் பறித்து வந்த கும்பல் கைது!