நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கக் கூடும் எனக்கூறி டிக் டாக், யூசி பிரவுசர், ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு நேற்று தடை விதித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு எதிர்க் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அகில இந்திய வர்த்தகக் கூட்டமைப்பும், இந்தியாவை மையமாகக் கொண்டு செயல்படும் ’ஷேர் சாட்’ செயலியும் சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்ததற்கு வரவேற்பு தெரிவித்துள்ளன.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால், “சீனப் பொருள்களை புறக்கணிப்போம் என்ற பரப்புரைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மத்திய அரசு 59 சீன செயலிகளைத் தடை செய்துள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கை நாட்டு மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. நாட்டில் உள்ள ஏழு கோடி வர்த்தகர்களும் மத்திய அரசின் இந்த முடிவிற்கு துணை நிற்போம்” என்றார்.
ஷேர் சாட் இயக்குநர்களில் ஒருவரான பெர்கீஸ் மாலு கூறும்போது, ”ஷேர் சாட், மத்திய அரசின் இந்த முடிவை மனப்பூர்வமாக வரவேற்கிறது. இணையப் பாதுகாப்பு, நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்கு ஊறு விளைவிக்கும் நடவடிக்கைகளில் இருந்து, நம்மை இந்த முடிவுகள் பாதுகாக்கும். மத்திய அரசு தொடர்ந்து இந்தியாவின் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இணைய ஆடியோ செயலியான காப்பிரியும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளது. ஆனால், மத்திய அரசின் இந்த நடவடிக்கை குறித்து கூகுள், ஆப்பிள் நிறுவனங்கள் எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் உள்ளன.
இதையும் படிங்க:இந்தியாவில் டிக்டாக் உள்ளிட்ட 59 சீனச் செயலிகளுக்குத் தடை - ஏன்?