டெல்லி: திறன் மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, நிலத்தடி நீர் மேலாண்மை ஆகியவற்றில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையோன ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மத்திய நிலத்தடி நீர் வாரியம் (CGWB), நீர்வளம், நதி மேம்பாடு, கங்கை புதுப்பிப்பு துறை ஆகியவற்றுடன் ஆஸ்திரேலியாவின் நிலத்தடி நீர் மேலாண்மை நிறுவனமான மார்வி பார்ட்னர்ஸ் ஆகியவை இடையே கடந்தாண்டு அக்டோபரில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையிடம் எடுத்துக் கூறப்பட்டது.
நிலத்தடி நீர் உள்பட நீர்வளங்களை மேம்படுத்துவதற்கான பயிற்சி மற்றும் கல்வியில் ஒத்துழைப்புடன் செயல்படவும், வேளாண்மை, நகர்ப்புறம், தொழிற்சாலைகள், சுற்றுச்சூழல் தேவைக்கான நீர்பாதுகாப்பு குறித்த ஆராய்ச்சி ஆகியவற்றுக்காக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
ஜம்மு காஷ்மீர், லடாக் ஒன்றிய பிரதேசங்களுக்கு 520 கோடி ரூபாய் மதிப்பில் சிறப்புத் தொகுப்பு அளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன்படி 2023-24 வரையிலான 5 ஆண்டு காலத்திற்கு தீனதயாள் அந்தியோதயா யோஜனா- தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஜம்மு காஷ்மீர், லடாக் ஒன்றிய பிரதேசங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும்.
தேசிய கனிம மேம்பாட்டு நிறுவனத்திடம் (என்எம்டிசி) இருந்து, நகர்னர் எஃகு ஆலையை (NSP) பிரிக்கவும், அதிலுள்ள மத்திய அரசின் பங்குகளை முழுமையாக விற்கவும், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கொள்கை அளவிலான ஒப்புதலை வழங்கியது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.