பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது போடப்படும் போக்சோ சட்டத்தில் மரண தண்டனை விதிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது.
அதன்படி புதியதாக திருத்தப்பட்ட சட்டத்தின்படி குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தூக்கு தண்டனை வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், இந்த கூட்டத்தில் திருநங்கைகள் பாதுகாப்பு மசோதா, ஒரே நதிநீர் தீர்ப்பாயம் உள்ளிட்ட மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் பாலினமான திருநங்கைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் ஆகியவற்றில் பாகுபாடு காட்டக்கூடாது என்று திருநங்கை பாதுகாப்பு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்று, நாடு முழுவதிலும் உள்ள நதிநீர் பிரச்னைகளை தீர்வு காணும் வகையில் ஒரே நதிநீர் தீர்ப்பாயம் அமைக்கும் மசோதாவிற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த மசோதாவின் மூலம் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னைகளில் ஓர் ஆண்டுக்குள் தீர்வு காண முடியும். இந்த மசோதாக்கள் அனைத்தும் விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக இயற்றப்படவுள்ளது.