குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் 311 உறுப்பினர்களின் ஆதரவோடு டிசம்பர் 9ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு மசோதா நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து, அதிமுக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் மசோதாவுக்கு ஆதரவளிக்க 125 உறுப்பினர்களின் ஆதரவோடு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார். இந்நிலையில், மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் தொடர் போராட்டம் நடைபெற்றுவருகிறது. அஸ்ஸாம் மாநிலத்தின் முக்கிய நகரமான குவகாத்தியில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதை தடுக்க காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். லட்சித்நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திபஞ்சல் தாஸ் என்பவருக்கு படுகாயம் ஏற்பட்டது.
இதையடுத்து இவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இதேபோல், ஹதிகவுன், பசிதா சாரலி ஆகிய இடங்களில் காவல்துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டு படுகாயம் அடைந்த 19 பேர், குவகாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பெரும்பான்மையானோர் எந்த அமைப்பையும் சாராதவர்கள் ஆவார்கள். போராட்டம் குறித்த செய்தியை சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குடியரசு தலைவரின் ஒப்புதலுடன் சட்டமாகும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா!