நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி இன்று (செப்டம்பர் 16) மூன்றாவது நாளாக நடைபெற்றுவருகிறது. நாட்டில் அதிகிரித்துவரும் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பேசிய திமுக எம்பி செந்தில் குமார், "கரோனா வைரஸ் பரவல் தொடர்பாக இந்த அவையை நான் எச்சரிக்கிறேன்.
நாட்டில் தற்போது கரோனா வைரஸ் பரவல் மிகவும் தீவிரமடைந்துள்ளது. பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்துள்ளது. கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வியை தழுவியுள்ளது. நாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க முறையான படுக்கைகளை ஒதுக்குவதில் கூட நாம் தவறிவிட்டோம். நான் ஒரு மருத்துவர் என்ற முறையில் நிலைமையை நன்கு உணர்வேன்.
இந்த மழைக்கால கூட்டுத் தொடர் நிறைவடைவதற்குள் நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65 லட்சத்தை எட்டும். நாட்டை கரோனாவிலிருந்து காக்க நாம் இன்னும் பல முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்" என தனது கருத்துகளை பதிவிட்டார்.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் ஒருபுறம் எடுத்துவந்தாலும், நாளுக்கு நாள் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகிரித்து வந்த வண்ணமே உள்ளது. மேலும், உலகளவில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ளது. அதுமட்டுமின்றி, நாட்டில் குறைவான கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு வருவதாக பல தரப்பினரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.