உத்ரகாண்ட் மாநிலம் விகாஸ்கர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், ஆற்றங்கரையோரம் மாட்டு வண்டியில் சென்றுள்ளார். அப்போது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் காவல் துறையினர் மாட்டு வண்டியிலுள்ள பொருட்களை வீசி எறிந்ததாகவும் மாட்டு வண்டிக்கு மோட்டார் வாகன விதிகளின்படி ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளதாகவும் விவசாயி குற்றம்சாட்டியுள்ளார்.
மாட்டு வண்டிக்கு எப்படி மோட்டார் வாகனச் சட்டம் பொருந்தும் என பலர் கேள்வி எழுப்பியதையடுத்து, தவறுதலாக அபராதத் தொகை விதித்ததாகவும் தவறை உணர்ந்தவுடன் அந்த அபராதத் தொகை ரத்து செய்யப்பட்டதாகவும் காவல் துறையினர் விளக்கமளித்துள்ளனர்.
நடைமுறைக்கு வந்த புதிய மோட்டார் வாகனச் சட்டத்தால் நாடு முழுவதும் வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்திவந்த நிலையில் உத்ரகாண்டில் நடந்த சம்பவம் சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகிவருகிறது.