புதிதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடிவரும் நிலையில், வேளாண் துறைக்கு 16.5 லட்சம் கோடி ரூபாய் கடன் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2021ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல்செய்யப்பட்டது.
அப்போது பேசிய அவர், "விவசாயிகளின் நலனில் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான கொள்முதல் நிலையான வேகத்தில் அதிகமாகியுள்ளது. அந்த வகையில், நெல் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மொத்தத் தொகை 1.72 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதனால் கோதுமை விவசாயிகள் 43.36 லட்சம் கோடி ரூபாய் பயன்பெற்றுள்ளனர். வேளாண் துறைக்கு 16.5 லட்சம் கோடி ரூபாய் கடன் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டு வேளாண் பொருள்களுக்கான விலை 1.5 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது" என்றார்.
இந்த அறிவிப்பின்போது, வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர்.