தேர்தல் பட்ஜெட்
வரும் மே மாதம் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மோடி தலைமையிலான பாஜக அரசு தனது இறுதி பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறது. இதனால், கவர்ச்சிகரமான அறிவிப்புகள் கொண்ட தேர்தல் பட்ஜெட்டாகவே இது அமையும் என்று கருதப்படுகிறது.
வருமான வரியில் மாற்றம்
இந்த பட்ஜெட்டில் வருமான வரி உச்ச வரம்பை ரூ.2,50,000-லிருந்து 3 லட்சம் அல்லது 5 லட்சமாக உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டும் உயர் வருமான பிரிவினருக்கு தற்போது விதிக்கப்படும் 30 சதவிகித வரியை 25 சதவிகிதமாகக் குறைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வருமான வரி சட்டத்தின் 80-c பிரிவின்படி முதலீடுகள் செய்ய வழங்கப்படும் வரிச் சலுகை ரூ.1,50,000-லிருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் கல்வி மற்றும் வீட்டுக்கடனுக்காக வட்டி செலுத்துவோருக்கு வழங்கப்படும் வரிச் சலுகைகளை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
விவசாயிகளைக் கவர திட்டம்
அண்மையில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்தது. ஊரகப் பகுதிகளில் ஏற்பட்ட அதிருப்தியே இதற்கு முக்கிய காரணமாக கூறப்பட்டது. இது மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு விவசாயிகளைக் கவரும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் அரசு நேரடியாக பணம் செலுத்தும் திட்டம் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா? நாட்டின் பொருளாதாரத்தை சீராக முன்னெடுத்துச் செல்லுமா? உள்ளிட்ட கேள்விகளுக்கு இன்னும் சற்று நேரத்தில் விடை தெரியும். பட்ஜெட் தொடர்பான உடனடி தகவல்களுக்கு ஈநாடு இந்தியாவுடன் இணைந்திருங்கள்.