டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் பகுதியில் அமைந்திருக்கும் சர்வோதயா பால வித்யாலயா பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருபவர் ரியாஸ். காசியாபாத்தில் உள்ள வசித்துவரும் இவரது குடும்பத்தில், இவருடன் சேர்த்து இரண்டு சகோதரிகள். இவரின் தந்தை உணவகத்தில் சமையலராக பணியாற்றி வருகிறார். அவருக்கு உதவியாக ரியாஸ், அதே உணவகத்தில் பாத்திரம் கழுவுகிறார்.
படிப்பு, வேலை தவிர்த்து மற்ற நேரங்களில் சைக்கிள் பந்தய வீரராக வேண்டும் என்ற கனவினை நிறைவேற்ற ரியாஸ் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார்.
இவர் 2017ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த மாநில அளவிலான சைக்கிள் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார். இதனைத் தொடர்ந்து கவுகாத்தியில் நடந்த சைக்கிள் போட்டியில் நான்காவது இடம் பிடித்து பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்தார்.

ஆனால் இவரது பயிற்சிக்கு அதிக செலவானதால், கடன் வாங்கி பயிற்சி மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. சமீபத்தில் இவரது நிலைப் பற்றி நாளிதழ்களில் செய்தி வெளியானது.
இதனால் டெல்லி இந்திரா காந்தி மைதானத்தில் சுழற்சி முறையில் சைக்கிள் பயிற்சி மேற்கொண்டு வந்த ரியாஸ் பற்றி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு தெரியவந்தது.
இந்நிலையில் மாணவர் ரியாஸ் சைக்கிள் பயிற்சி செய்வதற்கு ஏதுவாக பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, சர்வதேச தரத்திலான சைக்கிளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பரிசாக வழங்கியுள்ளார்.

இதுகுறித்து குடியரசு மாளிகை சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ''நாட்டைக் கட்டியெழுப்பதற்காக இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், சைக்கிள் பந்தய வீரராக வேண்டும் என்ற கனவுடன் போராடும் ரியாஸ் குடியரசுத் தலைவரால் தேர்வு செய்யப்பட்டார். அவரின் தொடர்ந்து கடினமாக போராடி அவரது கனவை எட்ட வேண்டும் என்பதே குடியரசுத் தலைவரின் விருப்பம்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அப்பா ஆன ஹர்திக் பாண்டியா!